”கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்த குடிகள் நாம்” போன்ற உணர்வூட்டி உசுப்பேத்தும் உரைகளில் நாம் காட்டும் ஆர்வத்தில் ஒர் சிறு பங்கையேனும் எமது வரலாற்று முதுசம்களை பேணுவதில் நாம் காட்டுவதில்லை. நாளைய நம் தலைமுறைக்கு எமது வரலாற்று தடங்களிற்கான ஆதாரங்களைப் பேணி ஒப்படைப்பதில் நாம் எள்ளளவிலும் சிரத்தை எடுத்துச் செயற்படுவதாயில்லை.
யாழ்ப்பாணத்தில் இராசதானி அமைத்து தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்று நாளைய தலைமுறைக்கு கட்புல ஆதாரமாகக் காட்டக்கூடிய சில ஆதாரங்களே இன்று நம்மிடையே எஞ்சியுள்ளது.அவையும் சிதைவடைந்து நலிவடைந்து அழிவடையும் நிலைக்குச் செல்வதை நாமெல்லாம் அமைதியாக அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்.
நல்லூர் இராசதானியின் இறுதி எச்சங்களாக இன்று எஞ்சியுள்ளவற்றுள் பிரதானமானது ”யமுனா ஏரி” எனப்படுகிற மன்னர்கள் பயன்படுத்திய ப வடிவ தடாகம்.புதர் மண்டிய பற்றைக் காட்டினிடையே அமைதியாய் சிதைவடைந்தவாறு அது இன்றுமிருக்கிறது.
யமுனா ஏரிக்குச் செல்வதற்கான பாதையை அதற்கு அண்மையில் சென்று நின்று கேட்டால் கூட அவ்விடத்தில் இருக்கும் இளைஞர்கள் கூட சரியாக அடையாளங்காட்ட மாட்டார்கள். அந்த அளவில் யமுனாஏரி பற்றிய விழிப்புணர்வு எங்கள் யாழ் மக்களிடம் இருக்கின்றது.
அடுத்தது யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை அண்மித்து அமைந்துள்ள ”மந்திரிமனை”. இது ஓர் புராதன மாடி வீடு.பிரதான வாசலிலிலே அவ் வீடு பற்றி சாசனம் ஒன்று பழந் தமிழில் எழுதப்பட்டிருக்கும். உள்ளே பல மர வேலைப்பாடுகளுடனான தூண்களையும் காணலாம்.அதுவும் சிதைவடைந்த வாறேயுள்ளது.
முன்பு ஒரு முறை அங்கு செல்கையில் ஒர் ஏழைக் குடும்பமொன்று அதன் ஒரு பகுதியைத் தமது வசிப்பிடமாக்கி இருந்தார்கள். எஞ்சிய பகுதிகளை அவ்விடத்தில் வசிக்கும் மூதாட்டியொருத்தி தனது ஆடு மாடுகளைக் கட்டுமிடமாக உபயோகித்துக் கொண்டிருந்தார். இவ்வாறாக எங்கள் வளங்களின் உச்சப் பயன்பாடு சென்றுகொண்டிருந்தது.
அடுத்தது யாழ் பருத்தித்துறை வீதியில் நல்லூரில் அமைந்துள்ள ஒரு நுளைவாயில் ஒன்று. பழைய அரண்மனையின் சிதைவு இது என்கிறார்கள். இதற்குத் தகரத்தாலான கொட்டகையொன்று (வரலாற்று ஆதாரக் காப்பிற்காக ஒரு சில நடவடிக்கைகளை நம்மவர்களும் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரம் இக் கொட்டகை. அதனை யார் எப்போது அமைத்தார்கள் என்பது தெரியவில்லை.) அமைத்து மழை, வெயிலிலிருந்து பாதுகாத்திருந்தார்கள். அண்மையில் நல்லூரில் நட்சத்திர விடுதியொன்று இதற்கு அண்மையில் கட்ட முற்படுகையில் எங்கள் கலாசார காவலர்கள் (!!??) பொங்கி எழுகையில் இது பற்றிய விழிப்புணர்வு ஓரளவு மக்களிற்கு ஏற்பட்டிருக்கலாம்.
இப்படியாக எங்கள் மரபுவழி முதுசங்கள் பேணப்படும் ஆர்வம் சென்று கொண்டிருக்கிறது. எப்போது தான் நாமெல்லாம் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடப் போகின்றோமோ? ஆனால் தாமதமாகும் ஒவ்வோர் கணமும் அவை சிதைவடைந்து அழிவடைந்து கொண்டேயிருப்பது தவிர்க்க முடியாதது என்பது மட்டும் வருத்தத்திற்குரிய உண்மை. அத்துடன் இலங்கை அரசினால் திட்டமிட்டு அழிக்கப்பட்டும் வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் ஒரு ஈழத்தமிழர் புராதன அருங்காட்சி சாலை.
அத்துடன் நல்லூரில் நாவலர் றோட்டில் நாவலர் கலாச்சார மண்டபத்திற்குப் பின்னால் யாழ் நூதண சாலை உண்டு. அதன் கேவலத்தைப் பாருங்கோ.
எத்தனை எத்தனை வீரபுருஷர்கள் மாமன்னர்களாய் ஆண்ட தேசம் இந்த யாழ்ப்பாண இராச்சியம். அந்த அரசாட்சிகளின் சுவடுகளைக் காவல்காக்கும் கலா நிலையமான நூதனசாலையின் கோலத்தைப் பாருங்கள். சாயமிழந்த நூற்சேலை பிச்சைக்காரியின் உடலை மறைப்பது போல ஒரு கட்டிடம். அதுவும் நாவலர் மணிமண்டபத்துக்குப் பின்புறமாகஇ கழிப்பறை போல ஏனோ தானோவென்ற அங்கீகாரம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை என்ற கல்விப்பீடம் மூலம் அறிஞர்கள் பலரை உருவாக்கி அங்கீகரிக்கக் காரணமாகவும் இருந்த இந்தக் கலைக்களஞ்சியங்கள் கடைசிக்காலத்தில் தம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் போல இருக்கும் நூதனசாலை.




No comments:
Post a Comment